ஹார்டுவேர் கடையில் பயங்கர தீ: ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் 6 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் அணைத்தனர்


ஹார்டுவேர் கடையில் பயங்கர தீ: ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் 6 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் அணைத்தனர்
x
தினத்தந்தி 13 Jan 2019 3:30 AM IST (Updated: 12 Jan 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே டவுனில் ஹார்டுவேர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின. 6 மணி நேரம் போராடி தீயை, தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

சிக்கமகளூரு,

தாவணகெரே டவுனை சேர்ந்தவர் முத்தலா. இவர் பின்னிபேக்ட் ரோட்டில் ஹார்டுேவர் கடை நடத்தி வருகிறார். இந்த கடை 2 மாடிகள் கொண்டதாகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணியளவில் முத்தலாவும், ஊழியர்களும் கடையில் இருந்தனர். அப்போது 2-வது மாடியில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் 2-வது மாடியில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முத்தலாவும், ஊழியர்களும் அலறி அடித்து கொண்டு கடையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் 2-வது மாடி முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

ரூ.50 லட்சம் பொருட்கள் நாசம்

இதுகுறித்து முத்தலா, தாவணகெரே டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து தாவணகெரே, சித்ரதுர்கா, ஹரிஹரா ஆகிய பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். மேலும் ஹார்டுவேர் கடையில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் உடனடியாக அணைக்க முடியவில்லை. பின்னர் 6 மணி நேரம் போராடி கடையில் பிடித்த தீயை தீயணைப்பு படைவீரர்கள் அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

மின்கசிவு காரணமாக....

இதுபற்றி தாவணகெரே டவுன் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இதுபற்றி முத்தலா அளித்த புகாரின்பேரின் தாவணகெரே டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடையில் தீப்பிடித்ததும் முத்தலாவும், ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Next Story