பெங்களூருவில் அதிக வட்டி தருவதாக கூறி வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி


பெங்களூருவில் அதிக வட்டி தருவதாக கூறி வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி
x
தினத்தந்தி 13 Jan 2019 4:00 AM IST (Updated: 12 Jan 2019 11:02 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அதிக வட்டி தருவதாக கூறி வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வரும் யஷ்சுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கின. இந்த சோதனைக்கு பின்பு நடிகர் யஷ் தனது ஆடிட்டர் பசவராஜை சந்தித்து பேசியதாகவும், அவரிடம் சில ஆவணங்களை அவர் கொடுத்து வைத்திருந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, நடிகர் யஷ்சின் ஆடிட்டரான பசவராஜிக்கு சொந்தமான சேஷாத்திரிபுரத்தில் உள்ள வீடு, அவர் ஆடிட்டராக பணியாற்றும் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த நிறுவனத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான மினரல் மிஸ்ராவிடம் இருந்து கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.1 கோடியை பெற்றிருந்ததும், அதற்கான ஆவணங்களும் சிக்கியது. அதுபற்றி பசவராஜிடம் விசாரித்த போது தான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர்களான பிரசாந்த் மற்றும் சஞ்சய் தான் மினரல் மிஸ்ராவிடம் இருந்து ரூ.1 கோடியை பெற்றிருந்ததாக தெரிவித்தார்.

ரூ.1 கோடி மோசடி

இதுபற்றி மினரல் மிஸ்ராவை தொடர்பு கொண்டு அதிகாரிகள் கேட்டார்கள். அப்போது பிரசாந்தும், சஞ்சயும் கூடுதல் வட்டி தருவதாக கூறி தன்னிடம் ரூ.1 கோடி வாங்கியதாகவும், அதனை திரும்ப தராமல் மோசடி செய்து விட்டதாகவும், பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டுவதாகவும் மினரல் மிஸ்ரா கூறினார். இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறிய அறிவுரையின்படி மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் பிரசாந்த், சஞ்சய் மீது மினரல் மிஸ்ரா புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் 2 பேரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரசாந்த், சஞ்சய்க்கு போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story