விதானசவுதாவில் ரூ.25.80 லட்சம் சிக்கிய விவகாரத்தில் மந்திரி புட்டரங்கஷெட்டி ராஜினாமா? முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பதில்


விதானசவுதாவில் ரூ.25.80 லட்சம் சிக்கிய விவகாரத்தில் மந்திரி புட்டரங்கஷெட்டி ராஜினாமா? முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பதில்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:30 PM GMT (Updated: 12 Jan 2019 5:48 PM GMT)

விதானசவுதாவில் ரூ.25.80 லட்சம் சிக்கிய விவகாரத்தில் மந்திரி புட்டரங்கஷெட்டி ராஜினாமா செய்வாரா? என்பது குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு விதானசவுதாவில் கடந்த 4-ந் தேதி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.25.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஊழல் தடுப்பு படை போலீசார், மந்திரி புட்டரங்கஷெட்டியின் அலுவலக ஊழியரான மோகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அந்த பணம் மந்திரி புட்டரங்கஷெட்டிக்கு லஞ்சமாக கிடைத்தது என்றும், அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை நடக்கவில்லை

விதானசவுதாவில் ரூ.25.80 லட்சம் சிக்கிய விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பணம் மந்திரி புட்டரங்கஷெட்டிக்கு சொந்தமானது என்று கூறுவது தவறானது. அது யாருடையது என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை வந்த பிறகு தான் பணம் யாருக்கு உரியது என்பது தெரியவரும். இந்த விவகாரத்தை பா.ஜனதா கையில் எடுத்து அரசியல் செய்கிறார்கள். விசாரணை நடைபெறும் பட்சத்தில் மந்திரி பதவியை புட்டரங்க ஷெட்டி ராஜினாமா செய்ய அவசியமில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. இரு கட்சி களின் தலைவர்களும் ஆலோசித்து தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுப்போம். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடனான தொகுதி பங்கீடு குறித்து மல்லிகார்ஜுன கார்கே, அவரது சொந்த கருத்தை தெரிவித்துள்ளார். அதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை.

மத்திய அரசே காரணம்

கோர்ட்டு தீர்ப்பையும் மீறி சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு பணி இடமாற்றம் செய்ததால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இந்த விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. அலோக் வர்மா ராஜினாமாவுக்கு மத்திய அரசே காரணம். ரபேல் போர் விமான ஊழலை மூடி மறைக்கவே அலோக் வர்மா பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ், மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக தொகுதி பங்கீடும் நடந்துள்ளது. மதவாத கட்சியான பா.ஜனதாவை தோற்கடிக்கவே அவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். இதுபோல, எல்லா கட்சிகளும் பா.ஜனதாவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.

இவ்வாறு சித்த ராமையா கூறினார்.

Next Story