எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20-ந்தேதி நெல்லை வருகை பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் பார்வையிட்டனர்
நெல்லையில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதையொட்டி, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
நெல்லை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்லையில் வருகிற 20-ந்தேதி மாலையில் நடக்கிறது.
கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்திற்கு நெல்லை டவுன் வாகையடி முனையில் மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த இடத்தை முன்னாள் அமைச்சரும், டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய்சுந்தரம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.
பின்னர் தளவாய் சுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், நெல்லையில் நடைபெறுகின்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டம் பாராளுமன்ற தேர்தலுக்கான வெற்றி கூட்டமாக அமையும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்த வாகையடி முனையில் இருந்து தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்கள். அதுபோல வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் தொடக்க கூட்டமாக இந்த கூட்டம் அமையும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றியை பெறும். இந்த கூட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள். கூட்டத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 5 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள் என்றார்.
அப்போது மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், ஆவின் தலைவரும், அமைப்பு செயலாளருமான சின்னத்துரை, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர் மோகன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story