நெல்லை அருகே பரபரப்பு அரசு ஒப்பந்ததாரர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை


நெல்லை அருகே பரபரப்பு அரசு ஒப்பந்ததாரர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Jan 2019 4:15 AM IST (Updated: 13 Jan 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளி ராஜா (வயது 50), அரசு ஒப்பந்ததாரர். இவரது வீட்டின் மீது நேற்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அது வெடித்து சிதறிய சத்தம் கேட்டு சுருளிராஜா குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த குண்டு வீச்சில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்கள் தப்பின. இதற்கிடையே பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடந்த 2006-ம் ஆண்டு சுருளிராஜாவின் உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முக்கிய பிரமுகர் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story