நெல்லை டவுனில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் குலை, சேனை கிழங்கு அறுவடை தீவிரம்


நெல்லை டவுனில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் குலை, சேனை கிழங்கு அறுவடை தீவிரம்
x
தினத்தந்தி 13 Jan 2019 3:45 AM IST (Updated: 13 Jan 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் பொங்கல் பண்டிகைக்கு மஞ்சள் குலை, சேனை கிழங்கு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை, 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கு பொது மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். கடைவீதிகளுக்கு சென்று பொங்கலுக்கு தேவையான மண்பானை, பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் குலை மற்றும் காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்த நிலையில் பொங்கலையொட்டி நெல்லை டவுன், சேந்திமங்கலம் பகுதியில் விவசாயிகள் மஞ்சள் குலை, கரும்பு ஆகியவை பயிரிட்டு இருந்தனர். டவுன் பாறையடி பகுதியில் சேனை கிழங்கும் பயிரிட்டு இருந்தனர்.

பொங்கல் நெருங்கி வருவதையொட்டி கடந்த 2 நாட்களாக கரும்பு, சேனை கிழங்கு மற்றும் மஞ்சள் குலை ஆகியவற்றை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மஞ்சள் செடியை கிழங்குடன் பாதுகாப்பாக தோண்டி எடுத்து, கிழங்கில் ஒட்டி இருக்கும் மண்ணை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் டவுன்-தச்சநல்லூர் மெயின் ரோட்டில் வைத்து நேரடியாக பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். ஒரு மஞ்சள் குலை ரூ.5 என்று குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் பொது மக்கள் அங்கு சென்று வாங்கிச்செல்கிறார்கள். சில விவசாயிகள் அதனை வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்து விட்டனர். இதுதவிர சேனை கிழங்கை தினமும் குறிப்பிட்ட பரப்பளவில் தோண்டி செடியில் இருந்து அகற்றி சேகரித்து, டவுன் நயினார்குளம் மொத்த மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் வாழைத்தார்களும் விற்பனைக்கு அனுப்பப் பட்டன.

இதுகுறித்து சேனை கிழங்கு விவசாயி ஊய்க்காட்டான் கூறுகையில், “பொங்கலையொட்டி கடந்த 3 நாட்களாக சேனை கிழங்கு அறுவடை செய்து வருகிறோம். மஞ்சள் போல், சேனை கிழங்கை தண்ணீரில் கழுவினால் அழுகி விடும். அதனை அப்படியே ஒரு நாள் காயவிட்டால் அதை சுற்றி இருக்கும் மண் உதிர்ந்து விடும். சேனை கிழங்கு தற்போது ஒரு கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை எங்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்த ஆண்டு சேனை கிழங்கு நல்ல மகசூல் கிடைத்துள்ளது” என்றார்.

Next Story