உடுமலை சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு; அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
உடுமலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை,
தமிழக அரசு கடந்த 1–ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல், இருப்பு வைத்தல், பதுக்கிவைத்தல் ஆகியவை கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று உடுமலை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த வாரம், நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 15 பேருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்திருந்தனர்.
இதைக்கண்ட சிலர் தங்களிடமிருந்த பிளாஸ்டிக் பொருட்களை சுகாதார ஆய்வாளர்களிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்தனர். கடைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தாங்களாகவே முன்வந்து ஒப்படைத்த பிளாஸ்டிக் பொருட்கள் என சுமார் 2 டன் அளவிற்கு கைப்பற்றப்பட்டுள்ளன. அவை விரைவில் தொடங்கப்பட உள்ள பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களில் இருந்து பைரோ ஆயில் என்ற எரிபொருள் தயாரிப்பதற்கான மையத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் நகரில் சில இடங்களில் இன்னும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்திலேயே பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துகிடக்கிறது. உடுமலை நகராட்சி பகுதியில் 5 டிவிசன்கள் உள்ளன. ஒவ்வொரு டிவிசனுக்கும் ஒரு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. உடுமலை சர்தார் வீதியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் குவிந்துகிடக்கிறது.
துப்புரவு தொழிலாளர்களால் சேகரித்து வரப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு (உரக்கிடங்கு) கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இந்த அலுவலக வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியேகிடக்கிறது. அந்த அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் அலுவலகமும் உள்ளது. குப்பைகளை குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லும் நகராட்சி லாரிகளும் இந்த சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில்தான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அப்படியிருந்தும் அங்கு குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் அங்கு சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.