வெவ்வேறு விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் விவசாயி உள்பட 3 பேர் பலியானார்கள்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராமப்பா (வயது 75). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கெலமங்கலம்-தேன்கனிக்கோட்டை சாலையில் கெலமங்கலம் துளசி நகர் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ராமப்பா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராமப்பா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குருபரப்பள்ளி அருகே உள்ள எண்ணேகொல்புதூரைச் சேர்ந்தவர் பெருமாள் (60). விவசாயி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார்சைக்கிள் பெருமாள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெருமாள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகராஜகடை அருகே உள்ள நாகமரத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ராம் (31). நிதி நிறுவன ஏஜெண்ட். சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பேரண்டப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியது. இதில் ராம் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story