அடையாறில் காதல் கணவர் விஷம் குடித்து தற்கொலை தகவல் அறிந்த இளம் பெண்ணும் தூக்கில் தொங்கினார்
அடையாறில் காதல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் இளம்பெண்ணும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடையாறு,
சென்னை தரமணி கண்ணகி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 25). இவரும், காஞ்சீபுரத்தை சேர்ந்த பூங்கொடி (22) என்ற பெண்ணும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பூங்கொடியின் பெற்றோர் உயிருடன் இல்லை என கூறப்படுகிறது.
விஸ்வநாதன்-பூங்கொடி தம்பதியினர் கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் அடையாறு இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினர்.
தூக்கில் தொங்கினார்
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கண்ணகி நகரில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு சென்ற விஸ்வநாதன், அங்கு திடீரென விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் விஸ்வநாதன் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த பூங்கொடி, காதல் கணவர் இறந்த சோகத்தில் இரவு முழுவதும் அழுதபடியே இருந்தார். நேற்று காலை வெகு நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, பூங்கொடி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்து வந்த அடையாறு போலீசார், பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் துக்கம் தாளாமல் இவரும் தற்கொலை செய்துகொண்டாரா?, விஸ்வநாதன் தற்கொலைக்கு என்ன காரணம்? அது தொடர்பாக போலீசார் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்தால் இந்த முடிவை எடுத்தாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story