மாசில்லா பொள்ளாச்சியை உருவாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு
மாசில்லா பொள்ளாச்சியை உருவாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொள்ளாச்சி,
போகி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீவைத்து எரிப்பார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது. இதை தடுக்க பொள்ளாச்சி நகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் மாசில்லா பொள்ளாச்சியை உருவாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதற்கு நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பொது சுகாதார நலன் கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாக்கவும் போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பாலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை எரிப்பதை பொதுமக்கள் தவிர்த்து, மாசில்லா பொள்ளாச்சியை உருவாக்க வேண்டும்.
உபயோகமற்ற பழைய பொருட்கள், இதர மக்காத கழிவு பொருட்களை நகரில் அனைத்து வார்டுகளிலும் வைக்கப்பட்டு உள்ள நகராட்சி குப்பை தொட்டிகளில் மட்டும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் துப்புரவு பணியாளர்கள் வண்டியுடன் வரும் போது பொதுமக்கள் வழங்க வேண்டும்.மேலும் தமிழக தடை விதித்துள்ள 14 வகையான பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த மற்றும் விற்பனை செய்ய நகராட்சி பகுதிகளில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்கனவே வீடுகள், கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் வைத்திருப்போர் அவற்றை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் இதர பொருட்களை சுதர்சன் நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, புதிய பஸ் நிலையம், நாச்சிகவுண்டர் வீதி, உழவர் சந்தை அருகில், கந்தசாமி பூங்கா, காந்தி மார்க்கெட் பின்புறம், திருவள்ளுவர் திடல் ஆகிய இடங்களில் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கோவை ரோட்டில் உள்ள மலேரியா பிரிவு துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஒப்படைக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவு பொருட்களை எரிப்பவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பு வைத்தல் மற்றும் உபயோகித்தல், கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், தர்மராஜ், விஜய்ஆனந்த், ஜெயபாரதி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.