திருவள்ளுவர் அரசு பள்ளி பவளவிழா: புதுவையில் முன்மாதிரி பள்ளியாக மாற்றப்படும் -நாராயணசாமி உறுதி


திருவள்ளுவர் அரசு பள்ளி பவளவிழா: புதுவையில் முன்மாதிரி பள்ளியாக மாற்றப்படும் -நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 12 Jan 2019 11:15 PM GMT (Updated: 12 Jan 2019 9:26 PM GMT)

புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் அரசு பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றப்படும் என முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பவளவிழா, முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் கலையரங்கில் நடைபெற்றது. விழாவை முதல்–அமைச்சர் நாராயணசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளியின் முன்னாள் மாணவியும், புதுச்சேரி பொறியியல் கல்லூரியின் பேராசிரியருமான கல்பனா பவளவிழா அறிக்கையை வாசித்தார். உயர்கல்வி துறை இயக்குனர் ருத்ரகவுடு, சிறப்பு அழைப்பாளர் சிவக்குமார் கோவிந்தசாமி, பள்ளியின் மூத்த விரிவுரையாளர் பூங்குழலி, வணிக வரித்துறை ஆணையர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓய்வு பெற்ற துணை முதல்வர் முருகானந்தம் ஏற்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி, சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் பவளவிழா கல்வெட்டினை திறந்துவைத்து, விழா மலர், குறுந்தகடு ஆகியவற்றை வெளியிட்டனர்.

விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

புதுச்சேரியில் அரசு பள்ளிகளை ஊக்குவிக்கும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு. அரசு பள்ளிகளின் தரம் உயர வேண்டும் என புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே பட்ஜெட்டில் கல்விக்கென கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. நமது மாநிலம் முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளில் உள்ள மாணவர்களை தங்களை குழந்தைகள் போல பாவிக்க வேண்டும். அவர்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்து வழிகாட்ட வேண்டும். அரசு பள்ளி, தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை பொருத்தே அமைகிறது.

புதுவை நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தனியார் பங்களிப்புடன் 100–க்கும் மேற்பட்ட வகுப்புகள் ஸ்மார்டு வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. திருவள்ளுவர் அரசு பள்ளி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறது. தனியார் பள்ளிகளுடன் போட்டி போட்டு வளர்ந்து பெருமை சேர்த்துள்ளது. இந்த பள்ளியில் படித்தவர்கள் மிகப்பெரிய பதவிகளில் உள்ளார்கள்.

திருவள்ளுவர் அரசு பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் விரும்புகிறார்கள். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் கூட இங்கு குழந்தைகளை சேர்க்க விரும்புகிறார்கள். இங்கு அதிகளவில் மாணவிகள் சேர்க்கைக்கு வழிவகை செய்யும்படி உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை மாநிலத்தில் ஸ்மார்டு சிட்டி திட்டத்தின் கீழ் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை முதல் முறையாக ஸ்மார்ட் பள்ளியாக மாற்றப்படும். இந்த பள்ளி முன்மாதிரியாக திகழும்.

புதுவை சிறிய மாநிலமாக இருந்தாலும் கல்வி கேந்திரமாக திகழ்கிறது. புதுவை அரசு பொறியியல் கல்லூரி இந்திய அளவில் 100–வது இடத்தில் உள்ளது. அதனை பல்கலைக்கழக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை விட பெண்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைக்கிறார்கள்.

தாகூர் அரசு கலைக்கல்லூரி மனித வளத்துறை மேம்பாட்டுத்துறையின் கணக்கெடுப்பில் இந்தியளவில் 100–வது இடத்திலும், கதிர்காமம் கலை கல்லூரி 125 இடத்தில் உள்ளது.

பள்ளிகளில் சிறப்பானதாக கூனிச்சம்பட்டு முதலிடத்தில் பெற்றது. உலக வங்கி நடத்திய கணக்கெடுப்பில் மக்கள் அனைத்து வசதிகளை பெற்ற மாநிலத்தில் அகில இந்திய அளவில் நாம் 5 இடத்தில் உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக முன்னாள் மாணவிகள் குழுத்தலைவரான அன்னைதெரசா மருத்துவ பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செவிலியர் பிரிவு அதிகாரி பிரமிளா தமிழ்வாணன் வரவேற்றார். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள், பள்ளி முன்னாள் மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதில் 10, 12–வது பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும் பரிசும், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் செல்வசுந்தரி மற்றும் முன்னாள் மாணவிகள், பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். முடிவில் முன்னாள் மாணவியும், கடலூர் பெரியார் அரசு கல்லூரியின் பேராசிரியருமான காந்திமதி நன்றி கூறினார்.


Next Story