சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது


சுற்றுலா பயணிகளுக்காக ஊட்டியில் ஹேப்பி சாலை அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 13 Jan 2019 4:15 AM IST (Updated: 13 Jan 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்காக ‘ஹேப்பி‘ சாலை அமலுக்கு வந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக நடந்து செல்லும் வகையில் சேரிங்கிராஸ் முதல் கேஷினோ சந்திப்பு வரை ஹேப்பி சாலையாக மாற்றம் செய்து உள்ளது. இந்த மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து கேஷினோ சந்திப்பு மற்றும் சேரிங்கிராசில் இருந்து ஹேப்பி சாலையில் வாகனங்கள் செல்வதை தடுக்க போக்குவரத்து தடுப்புகள் வைக்கப்பட்டன. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வழக்கமாக அந்த சாலையின் ஒருபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படும். ஆனால் நேற்று வாகனங்கள் எதுவும் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆகியோர் ஹேப்பி சாலையில் பாண்டி ஆட்டம், கேரம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை தொடங்கி வைத்தனர். அங்கு சுற்றுலா பயணிகள் உட்காருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறும்போது, சுற்றுலா பயணிகளுக்காக வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஹேப்பி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது என்றார். உள்ளூர் மக்கள் கூறியதாவது:–

ஊட்டியில் குழந்தைகள் பொழுதுபோக்க கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ளதை போல் நகராட்சி அல்லது பேரூராட்சி பூங்காக்கள் இல்லை. தாவரவியல் பூங்காவில் தற்போது நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், உள்ளூர் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் பூங்காவிற்கு செல்வது கடினமாக உள்ளது. இந்த நிலையில் ஹேப்பி சாலை கொண்டு வரப்பட்டு உள்ளதை வரவேற்கிறோம். ஆனால் ஹேப்பி சாலையில் உள்ள கூட்டுறவு நிறுவன அங்காடி முன்பு குழந்தைகள், பெண்களுக்காக ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் கூட்டுறவு துறை மூலம் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹேப்பி சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாததால் பிரிக்ஸ் சாலை, வால்சம்பர் சாலை ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்த அதிக கட்டணம் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் மூலம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் ஹேப்பி சாலையாக மாற்றம் செய்யப்பட்ட கமர்சியல் சாலையில் உள்ள ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்து இறங்க அனுமதிக்கப்பட வில்லை. சேரிங்கிராசில் வாகனத்தை நிறுத்தி விட்டு, நடந்து வரும்படி போலீசார் தெரிவித்தனர். ஓட்டல்களுக்கு தண்ணீர் லாரிகள் வர அனுமதிக்க வில்லை.


Next Story