குண்டும், குழியுமான ஊட்டி–கூடலூர் சாலை வாகன ஓட்டிகள் அவதி


குண்டும், குழியுமான ஊட்டி–கூடலூர் சாலை வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 9:48 PM GMT)

ஊட்டி,கூடலூர் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் சாலைகள் அனைத்தும் வளைந்து நெளிந்து காணப்படுகிறது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூடலூர், நடுவட்டம் வழியாக ஊட்டிக்கு வருகை தருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு ஊட்டி–கூடலூர் சாலை வழியாக மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக ஊட்டி–கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் வளைவில் திரும்பும் இடத்தில் சாலை மோசமாக இருப்பதால், சிறிது தூரம் விலகி செல்லும் போது எதிரே வரும் வாகனம் மீது மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மலைப்பாதையில் புதியதாக வாகனங்களை இயக்கி வரும் டிரைவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் விபரீதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:–

ஊட்டியில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, சுற்றுலா பயணிகள் ஊட்டி–கூடலூர் சாலையில் உள்ள சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் மற்றும் முதுமலைக்கு செல்கின்றனர். சீசன் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் அந்த சாலையில் சுற்றுலா வாகனங்கள் வரத்து அதிகமாக இருக்கும். மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா அரசு பஸ்கள் இருபுறங்களிலும் வந்து செல்லும்.

இதற்கிடையே காமராஜ் சாகர் அணைப்பகுதியில் இருந்து சூட்டிங்மட்டம் வரை உள்ள சாலையில் ஆங்காங்கே குழிகள் உள்ளன. கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இவை காலப்போக்கில் பெரிய குழிகளாக மாறி உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் நிலை இருக்கிறது. மேலும் அடர்த்தியாக மரம் வளர்ந்து சாலையில் நிழல் மூடியிருப்பதால், பழுதடைந்த பகுதிகள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. அதன் காரணமாக திடீரென வாகனம் குழிக்குள் சென்று வருவதால், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர். எனவே, குண்டும், குழியுமாக காணப்படும் ஊட்டி–கூடலூர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story