செலுவில் நடைமேம்பால பணி பத்லாப்பூர்- கர்ஜத் இடையே இன்று ரெயில் சேவை ரத்து
செலு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், பத்லாப்பூர்- கர்ஜத் இடையே இன்று ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் உள்ள செலு ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதில், இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைமேம்பாலம் கட்டுவதற்காக ராட்சத இரும்பு சட்டங்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. பணிகள் நடைபெறும் நேரத்தில் உயரழுத்த மின்பாதையில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்லாப்பூர்- கர்ஜத் இடையே ரெயில்கள் இயக்கப்படாது.
எக்ஸ்பிரஸ் ரெயில்
சி.எஸ்.எம்.டி., தானேயில் இருந்து இயக்கப்படும் கர்ஜத் ரெயில்கள் அம்பர்நாத், பத்லாப்பூரில் நிறுத்தப்படும். இதேபோல கர்ஜத்தில் இருந்து வரும் ரெயில்கள் அம்பர்நாத், பேலாப்பூரில் இருந்து புறப்பட்டு தானே, சி.எஸ்.எம்.டி. வரும். மேலும் வழக்கமாக கல்யாண் வழியாக வரும் சென்னை- சி.எஸ்.எம்.டி.(வண்டி எண் 11042), கோவை- எல்.டி.டி.(வண்டி எண் 11014) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கர்ஜத்- பன்வெல்- திவா வழியாக சி.எஸ்.எம்.டி. வந்து சேரும்.
இந்த ரெயில்கள் கல்யாண் பயணிகளின் வசதிக்காக திவாவில் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story