மும்பையில் 6-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் பெஸ்ட் பஸ் ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


மும்பையில் 6-வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் பெஸ்ட் பஸ் ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 13 Jan 2019 5:00 AM IST (Updated: 13 Jan 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

பெஸ்ட் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மாநில அரசின் தலைமை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றும் வேலை நிறுத்தம் நீடிக்க இருப்பதால் மாற்று ஏற்பாடாக தனியார் பள்ளிக்கூட பஸ்கள் இயக்கப்படுகிறது.

மும்பை,

மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பெஸ்ட் குழுமம் சார்பில் 3 ஆயிரத்து 300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வேலை நிறுத்தம்

இந்த பஸ் சேவைகளை சுமார் 25 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெஸ்ட் குழுமத்தில் 32 ஆயிரத்துக்கும் அதிக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், நிதி நெருக்கடியால் பெஸ்ட் குழுமம் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை கூட சரியாக வழங்க முடியாமல் திணறி வருகிறது.

இந்தநிலையில், பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைத்து பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் பஸ் ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.

இதன் காரணமாக மும்பையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும். இல்லையெனில் மெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பெஸ்ட் குழுமம் எச்சரித்தது. வேலை நிறுத்ததில் ஈடுபடும் ஊழியர்கள், பெஸ்ட் குடியிருப்பை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் எதற்கும் பெஸ்ட் ஊழியர்கள் பணியவில்லை. மாறாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற மாநகராட்சி நோட்டீசால் பெஸ்ட் ஊழியர்களின் குடும்பத்தினரும் போராட்டத்தில் குதித்தனர்.

இதைத்தொடர்ந்து பெஸ்ட் நிர்வாகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அரசு பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பெஸ்ட் ஊழியர் சங்கத்துக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மாநில அரசு அமைத்த கமிட்டியின் தலைவராக மாநில தலைமை செயலாளர் டி.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த கமிட்டியில் மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா, மாநில போக்குவரத்து மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை செயலாளர்கள், பெஸ்ட் பொது மேலாளர் சுரேந்திரகுமார் பட்கே ஆகியோர் இருந்தனர்.

இந்தநிலையில் மாநில அரசு அமைத்த கமிட்டியுடன் பெஸ்ட் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஊழியர்களின் கோரிக்கைகளை ஐகோர்ட்டில் தெரிவிக்க மாநில அரசின் கமிட்டி முடிவு செய்து உள்ளது.

இன்றும் பஸ்கள் ஓடாது

இது குறித்து பெஸ்ட் ஊழியர் சங்க தலைவர் சசாங்ராவ் கூறியதாவது:-

மாநில அரசிடம் எங்கள் கோரிக்கைகளை தெளிவாக சொல்லிவிட்டோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறித்து மாநில தலைமை செயலாளர் டி.கே.ஜெயின் கூறுகையில், ‘‘பெஸ்ட் ஊழியர்களின் கோரிக்கைகள் ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட உள்ளது. எனவே பேச்சுவார்த்தை குறித்து சொல்ல முடியாது’’ என்றார். இந்தநிலையில் பெஸ்ட் பட்ஜெட்டை மாநகராட்சி பட்ஜெட்டுடன் இணைக்கவேண்டும் என்ற ஊழியர்களின் கோரிக்கையை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளாது என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து 6-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் பெஸ்ட் பஸ்கள் ஓடாது. திங்கட்கிழமை பெஸ்ட் ஊழியர்களின் கோரிக்கைகள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே முடிவு தெரியவாய்ப்பு உள்ளது.

தனியார் பள்ளி பஸ்கள்

இந்தநிலையில் நேற்று மாநில போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று மும்பை பள்ளி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பொதுமக்களின் வசதிக்காக பஸ்களை இயக்க தொடங்கி உள்ளனர். இந்த பஸ்கள் மும்பை முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்சில் 10 கிலோ மீட்டருக்கு கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படுகிறது.

மும்பையில் 2 ஆயிரம் பள்ளி பஸ் மக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வருவதாக மும்பை பள்ளி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அனில் கார்க் கூறினார்.

மும்பையில் பள்ளி பஸ்கள் இயக்கப்படுவதால் தற்போது மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்து உள்ளனர்.

Next Story