வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது கலெக்டர் பேச்சு


வன்கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 13 Jan 2019 3:42 AM IST (Updated: 13 Jan 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமைகளை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக எஸ்.சி. மற்றும் எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் விதிகள் போன்றவை மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, மாநில அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் தீண்டாமையை விட்டொழித்து பொதுமக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அந்த கிராமத்திற்கு ரூ.10 லட்சம் தமிழக அரசால் நிதி வழங்கப்படுகிறது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கலவரங்களால் பாதிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தீருதவியாக உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.8¼ லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி மற்றும் ஒரு வீடு, விவசாய நிலம் வழங்கப்படுகிறது. வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வன்கொடுமை தொடர்பாக விசாரணையில் உள்ள வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு உறுப்பினர் ஆடலரசன் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் இருதயராஜ், வன்கொடுமை தடுப்பு தொடர்பான வழக்குகளின் அரசு வக்கீல் அர்ச்சுனன், வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் முருகானந்தம், ராஜாங்கம், பழனி, டாக்டர் பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story