100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.347¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள் திட்ட இயக்குனர் தகவல்


100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.347¼ கோடியில் வளர்ச்சிப்பணிகள் திட்ட இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:31 PM GMT (Updated: 12 Jan 2019 10:31 PM GMT)

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.347 கோடியே 26 லட்சம் செலவில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்று திட்ட இயக்குனர் தெரிவித்தார்.

திருவெண்காடு,

சீர்காழி அருகே நாங்கூரில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 64 ஆயிரம் செலவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை நாகை மாவட்ட தேசிய ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, ஊராட்சி மன்ற அலுவலகம், கல்வெட்டு, சிமெண்டு சாலை, சிறுபாலம், சாலையோர மரக்கன்றுகள் நடுதல், ஜல்லி கற்களால் சாலை அமைத்தல், தனிநபர் கழிவறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் ரூ.347 கோடியே 26 லட்சம் செலவில் நடைபெற்று வருகின்றன. இதில் சீர்காழி தாலுகா பகுதியில் இந்த திட்டத்தின் கீழ் ரூ.51 கோடியே 23 லட்சம் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகளை பயன்படுத்துவது குறைந்துள்ளது. இதனால் கிராமபுறங்களில் பாலித்தீன் பைகளால் ஏற்படும் குப்பைகள் குறைந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாகும். பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக துணிப்பையை எடுத்து செல்ல வேண்டும். ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் முத்துகுமார், தாரா, ஒப்பந்தகாரர் மாமல்லன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story