மாவட்ட கருவூலத்துறையில் மென்பொருள் பயன்பாட்டு திட்டம்; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


மாவட்ட கருவூலத்துறையில் மென்பொருள் பயன்பாட்டு திட்டம்; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:19 AM IST (Updated: 13 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட கருவூலத்துறையில் மென்பொருள் பயன்பாட்டு திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்ட தொடக்கவிழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கருவூல அலுவலர் ராமலட்சுமி வரவேற்று பேசினார். திட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:- இந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டம் இரண்டு தொகுப்புகளாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி முதல் தொகுப்பாக சிவகங்கை மாவட்டம் உட்பட 16 மாவட்டங்களில் இந்த மென்பொருள் செயல்பாட்டினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருளை பயன்படுத்துவதன் மூலமாக, அரசின் நிகழ்வு நேர வரவு மற்றும் செலவுகளை உடனடியாகவும், இதர விவரங்களை எளிமையாகவும் பெறுவதோடு, அரசின் நிர்வாகமும் மேம்படும் வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள், மின் பதிவேடுகளாக மாற்றப்பட்டு, அவர்களின் சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, விடுப்பு மேலாண்மை உள்ளிட்ட இதர விவரங்கள் மிக விரைவாகவும், துல்லியமாகவும் பராமரிக்க இயலும். மேலும், இது அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்கள் மற்றும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாகவும் அமையும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் விஜயன்மதமடக்கி உள்பட அனைத்து அரசு அலுவலர்கள், கருவூலத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story