99 வயதில் மலையேற்ற சாகசம்
மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்கு உடலும், மனதும் வலிமையாக இருந்தால் போதும். வயது அதற்கு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார், 99 வயதாகும் சித்ரன் நம்பூதிரிபாடு.
மலையேற்ற பயிற்சி மேற்கொள்வதற்கு உடலும், மனதும் வலிமையாக இருந்தால் போதும். வயது அதற்கு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார், 99 வயதாகும் சித்ரன் நம்பூதிரிபாடு. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் கல்வி துறையில் கூடுதல் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 29 முறை இமய மலைக்கு மலையேற்றம் மேற்கொண்டிருக்கிறார்.
பொதுவாக இமயமலை பகுதியில் வெப்பநிலை மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவாகவே இருக்கும். குளிருக்கு இதமான ஆடைகள் அணிந்திருந்தாலும் அங்கு நிலவும் சீதோஷணநிலையை சமாளிப்பதற்கு உடலும், உள்ளமும் ஒத்துழைக்க வேண்டும். முதுமை பருவத்தை கடந்திருந்தாலும் சித்ரன் உடல் மற்றும் மனதளவில் சுறுசுறுப்புடன் காணப்படுகிறார். முதன் முதலில் மலையேற்றம் செய்தபோது இருந்த மனநிலையே இப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். மலையேற்றம் மேற்கொள்பவர்களுக்கு பொதுவாக வயிற்று உபாதை பிரச்சினைகள் ஏற்படும். சித்ரனுக்கு அதுபோன்ற பிரச்சினைகள் இதுவரை ஏற்படவில்லை.
‘‘1952-ம் ஆண்டு முதன் முதலில் நண்பருடன் இமயமலைக்கு மலையேற்றம் மேற்கொண்டேன். ருத்ரபிரயாக் என்ற இடத்தை நெருங்கும்போது நாங்கள் கொண்டு சென்ற உணவு கெட்டுப்போய்விட்டது. இருப்பினும் இரண்டாவது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டேன். அன்றைய காலகட்டத்தில் இப்போது போல் சாலை வசதி இல்லை. ருத்ரபிரயாக்கில் இருந்து 90 கி.மீ தூரம் வனப்பகுதி வழியாக நடந்து சென்று பத்ரிநாத்தை சென்றடைந்தோம். நான் சிறுவயதிலேயே இமய மலையை பற்றி நன்கு அறிந்திருந்தேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அடிக்கடி அங்கு செல்வார். தனது சாகச பயண அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொள்வார். அதை கேட்டதும் எனக்கும் இமய மலைக்கு மலையேற்றம் செல்லும் ஆர்வம் உண்டானது. அதன் அமைதியான சூழல் எல்லோரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது’’ என்கிறார்.
இந்த ஆண்டில் 30-வது முறை இமயமலைக்கு சென்று விட வேண்டும் என்பது சித்ரனின் ஆசையாக இருக்கிறது. இந்த வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுப்பழக்க வழக்கமும், வாழ்க்கைமுறையும்தான் காரணம் என்கிறார். சித்ரன் சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறார். தினமும் நடைப்பயிற்சியும், யோகாசனமும் மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story