அபிஷேக பாலில் அசல் மோர்


அபிஷேக பாலில் அசல் மோர்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:40 AM GMT (Updated: 13 Jan 2019 10:40 AM GMT)

கோவிலில் பூஜைக்காக வழங்கப்படும் பால், பூக்கள், பிரசாதங்கள் போன்றவை வீணாகுவதை தடுத்து, அவற்றையும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் சில கோவில் நிர்வாகங்கள் களமிறங்கி இருக்கின்றன.

கோவிலில் பூஜைக்காக வழங்கப்படும் பால், பூக்கள், பிரசாதங்கள் போன்றவை வீணாகுவதை தடுத்து, அவற்றையும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் சில கோவில் நிர்வாகங்கள் களமிறங்கி இருக்கின்றன. மும்பையில் உள்ள ஒரு கோவிலில் பூஜைக்கு வழங்கப்படும் மலர்கள் மற்றும் இலைகளை மறுசுழற்சி செய்து கோவிலில் வளர்க்கப்படும் 150-க்கும் மேற்பட்ட மரங் களுக்கு உரங்களாக பயன்படுத்துகிறார்கள். அதேபோல் அகமதாபாத்தில் உள்ள ஒரு கோவிலில் பூஜைக்கு பயன் படுத்தப்பட்டு வீணாகும் பொருட்களை கொண்டு ஆர்கானிக் தோட்டம் அமைத்திருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் பாலை சுத்தி கரிப்பு செய்து மோர் தயாரித்து பக்தர் களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பெங்களூரு டி. தாசரஹள்ளி பகுதியில் அமைந்திருக்கும் கங்காதீஸ்வரா கோவிலில் திங்கட்கிழமைதோறும் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதற்காக அன்றைய தினம் 500 லிட்டர் பால் அபிஷேகத்திற்காக சேகரிக்கப் படுகிறது. ஏராளமான பக்தர்கள் அபிஷேகத்திற்காக பால் வழங்குகிறார்கள். அந்த பாலை அபிஷேகத்திற்கு பின்பு பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கு வழிகண்டு பிடித்துவிட்டது. அதுபற்றி கோவில் நிர்வாகி ஈஸ்வரநந்தா சுவாமி, ‘‘பக்தர்களுக்கு சிறந்த சேவை வழங்குவது பற்றி நீண்டகாலமாக ஆலோசித்து வந்தோம். பால் மிகவும் முக்கியமான உணவுப் பொருள். அதனை அபிஷேகத்திற்கு பிறகு வீணாக்காமல் பக்தர்களுக்கு வழங்க தீர்மானித்தோம். அபிஷேகத்தின்போது பாலுடன் மஞ்சள் உள்பட வேறு எந்த பொருளும் கலப்பதில்லை. அதனால் பால் கெட்டுப்போவதில்லை. அந்த பாலை பல்வேறு கட்டங்களில் தூய்மையாக சுத்திகரிப்பு செய்து மோராக மாற்றுகிறோம்’’ என்கிறார்.

திங்கட்கிழமை அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட பால் மறுநாள் செவ்வாய்க்கிழமை பக்தர்களுக்கு மோராக வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வழங்குகிறார்கள். மோரை விநியோகிப்பதற்கு பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்துவதில்லை. சில்வர் டம்ளர்களையே பயன்படுத்துகிறார்கள்.

Next Story