அந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூர்,
அந்தியூர் அருகே பட்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட கெம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணிக்கு கெம்மியம்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கோஷமிட்டபடி அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து வரிசையாக நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணன், பட்லூர் ஊராட்சி செயலாளர் தங்கராசு மற்றும் அம்மாபேட்டை துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கெம்மியம்பட்டி மற்றும் கெம்மியம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு அட்டவணைப்புதூர் பகுதியில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 மாதமாக எங்களுக்கு சீராக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால்தான் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர். அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு காலை 8.15 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் வாகனங்கள் செல்லத்தொடங்கின. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் 1¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story