தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் ரூ.5.61 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்


தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் ரூ.5.61 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:00 PM GMT (Updated: 13 Jan 2019 1:47 PM GMT)

தர்மபுரி அவ்வையார் அரசு பள்ளியில் ரூ.5.61 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான இடவசதி இல்லாததால் அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான 2.44 ஏக்கர் நிலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் 34 புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறை கட்டிடங்கள் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த ரூ.5.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு உதவி கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், உதவி பொறியாளர் செந்தில், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வரவேற்றார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

விழாவில்அமைச்சர் பேசுகையில், தர்மபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியை விரிவாக்கம் செய்ய வனத்துறைக்கு சொந்தமான இடத்தை பெற கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த இடத்தை பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் இந்த இடம் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, ஜோதிபழனிசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், ஆறுமுகம், தாசில்தார் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை முனுசாமி, நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் நாகேந்திரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் நன்றி கூறினார். இதேபோன்று நல்லம்பள்ளி தாலுகா ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.90 கோடி மதிப்பில் 16 புதிய வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை கட்டிடங்கள் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்தும் பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்.


Next Story