ஈரோட்டில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 மருத்துவ குழுக்கள் அமைப்பு கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோட்டில் முதல் முறையாக நடக்க உள்ள ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி. பள்ளிக்கூட மைதானத்தில் வருகிற 19-ந் தேதி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்கள்.
ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்த வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஜல்லிகட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் இணைந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு குழு சார்பில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரும் உள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்துக்கு வரும் பார்வையாளர்கள், காளை மாடுகள், வீரர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 16 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளை மாடுகளையும் மருத்துவ பரிசோதனை செய்ய கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தலைமை டாக்டர்களை கொண்ட 4 குழுக்கள் மற்றும் ஒரு நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும், போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஒரு டாக்டர், 4 செவிலியர்கள் வீதம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தீயணைப்பு வாகனங்களும், தீயணைப்பு வீரர்களும் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துப்புரவு தொழிலாளர் 50 பேர் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 நடமாடும் கழிப்பறைகளும், 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 தண்ணீர் தொட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் குழந்தைசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.காசிலிங்கம், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் டி.ரமாமணி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story