நகரம் முழுவதையும் கண்காணிக்க 30 கட்டுப்பாட்டு அறைகளுடன் 14,200 கேமராக்கள் இணைப்பு கோவை போலீஸ் கமிஷனர் தகவல்
கோவை நகரம் முழுவதையும் கண்காணிக்க 30 கட்டுப்பாட்டு அறைகளுடன் 14,200 கேமராக்கள் இணைக்கப்பட உள்ளதாக போலீஸ் கமிஷனர் சுமித்சரண் கூறினார்.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதிகளான தெப்பக்குள மைதானம், பூமார்க்கெட், தேவாங்கபேட்டை, பொன்னுசாமி வீதி, வடகோவை, மேட்டுப்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள இந்த கண்காணிக்கும் கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை ஆர்.எஸ்.புரம் பால்மார்க்கெட் அருகே உள்ள மாநகராட்சி சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களின் இயக்கத்தை கோவை நகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றச்செயல்கள் நடைபெற்றால் அதில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படு வதையும் தடுக்க முடியும். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டம் அனைத்து பகுதிகளுக்கும் ஒரு முன்னுதாரணம் ஆகும்
இந்த ஆண்டு இறுதிக்குள் கோவை நகரின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள 14,200 கேமராக்களுடன் இணைப்பு ஏற்படுத்தி நகரம் முழுவதும் தீவிர கண்காணிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் 30 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்படும்.
ஏற்கனவே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையுடன் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. நகரின் அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமராவின் வளையத்துக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், சுஜித்குமார், பெருமாள், ஈஸ்வரன் மற்றும் உதவி கமிஷனர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி கமிஷனர் வெங்கடேசன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் ஜோதி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா குறித்து குறும்படம் மற்றும் சி.டி. வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story