கோவை உள்பட பல்வேறு இடங்களில் 15 ஸ்கூட்டர்கள் திருடிய வாலிபர் கைது
கோவை உள்பட பல்வேறு இடங்களில் 15 ஸ்கூட்டர்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை,
கோவை பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டு இருக்கும் ஸ்கூட்டர்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், கோவை கிழக்குப்பகுதி குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் மேற்பார்வையில் பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் பீளமேடு பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். விசார ணையில், அவர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்த மணியழகன் (வயது30) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருடப்பட்ட ஸ்கூட்டர் என்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் 15 ஸ்கூட்டர்கள் மீட்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.4¼ லட்சம் ஆகும். மணியழகன், கோவை சித்ரா, காளப்பட்டி, கணுவாய் பகுதிகளில் 7 ஸ்கூட்டர்களையும், தஞ்சாவூர் பகுதிகளில் 5 ஸ்கூட்டர்களையும், பழனியில் 3 ஸ்கூட்டர்களையும் திருடியுள்ளார்.
மணியழகன் மீது ஏற்கனவே சூரம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. அவர், சிறை தண்டனை அடைந்து ஜாமீனில் விடுதலையாகி மீண்டும் இருசக்கர வாகனங்களை திருடியபோது பிடிபட்டுள்ளார். இவர், பெண்கள் பயன்படுத்தும் ஸ்கூட்டர்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கள்ளச்சாவி போட்டு திறந்து ஸ்கூட்டரை திருடி விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவு செய்துள்ளார். கைதான மணியழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 15 ஸ்கூட்டர்களை மீட்ட தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பாராட்டினார்.
Related Tags :
Next Story