செஞ்சி அருகே கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த மேலும் 4 பேர் கைது
செஞ்சி அருகே வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே திருவம்பட்டு கிராமத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.1½ கோடி மோசடி நடந்திருப்பதாகவும், அதற்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன்(வயது 39) மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் வங்கி மேலாளர் திருநாதராவ் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஜெகநாதன் தனது சொந்த செலவுக்காக மனைவி சத்யா மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த சரவணன், மணிவண்ணன், கோபிநாத், சுரேஷ்பாபு, கீழ்மாம்பட்டை சேர்ந்த முனீஸ்வரமூர்த்தி, திருவம்பட்டை சேர்ந்த வேணுகோபால் ஆகியோர் மூலம் கவரிங் நகைகளை கொடுத்து அவர்களது பெயர்களில் தான் பணிபுரியும் வங்கியில் அடகு வைத்து ரூ.1 கோடியே 35 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெகநாதன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ஜெகநாதனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜெகநாதனின் மனைவி சத்யா(31), முனீஸ்வரமூர்த்தி(31), வேணுகோபால்(35), சுரேஷ்பாபு(46) ஆகிய 4 பேர் நேற்று வெளியூர் தப்பிச் செல்வதற்காக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் நிற்பதாக செஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செஞ்சி போலீசார் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மணிவண்ணன், சரவணன், கோபிநாத் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story