விளைச்சல் குறைவால் கரும்பு விலை உயர்வு ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனை


விளைச்சல் குறைவால் கரும்பு விலை உயர்வு ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனை
x
தினத்தந்தி 14 Jan 2019 4:00 AM IST (Updated: 13 Jan 2019 11:35 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விலை உயர்ந்து உள்ளது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி,

பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் செங்கரும்பு முதலிடம் பிடித்து இருக்கும். கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. தேனி மாவட்டத்தில் சின்னமனூர், தேவதானப்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் செங்கரும்பு சாகுபடி நடக்கிறது.

இங்கு இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் கரும்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சின்னமனூர், உப்புக்கோட்டை பகுதிகளில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைவாகவே இருந்தது. அதேநேரத்தில் தேவதானப்பட்டி அருகில் மலையடிவார பகுதிகளில் கரும்பு சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர்.

‘கஜா’ புயல் நிகழ்த்திய கோரதாண்டவத்தால் ஏராளமான தோட்டங்களில் கரும்புகள் முறிந்து விழுந்து நாசமாகின. இதனால் மாவட்டத்தில் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளது. அதேபோல், பிற மாவட்டங்களிலும் விளைச்சல் குறைந் துள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே தேனிக்கு கரும்பு கட்டுகள் கொண்டு வந்து குவிக்கப்படுவது வழக்கம். தேனி வாரச்சந்தை வளாகத்தில் காணும் இடம் எங்கும் செங்கரும்பு கட்டுகளாக இருக்கும். ஆனால், நாளை (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரும்பு வரத்து குறைவாகவே இருந்தது.

வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து காணப்பட்டது.

ஆனால் விவசாயிகளிடம் ஒரு கட்டு ரூ.200 முதல் ரூ.250 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அதே சமயம் வாரச்சந்தையில் இரு மடங்கு விலை உயர்ந்து காணப்பட்டது. அதாவது 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது.

Next Story