மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம்: அரசு பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்


மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரம்: அரசு பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 14 Jan 2019 4:15 AM IST (Updated: 14 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்த பள்ளி கட்டிடம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 31 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். பழமைவாய்ந்த இந்த பள்ளி கட்டிடம் சரியான முறையில் பராமரிக்கப்படாததால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.

இந்த நிலையில், கடந்த 11-ந்தேதி வழக்கம் போல் மாணவ, மாணவிகள் வகுப்பறையில் இருந்து பாடம் படித்து கொண்டு இருந்தனர். அப்போது கட்டிடத்தின் வரண்டா பகுதியில் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்டவுடன், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என்று அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லி கொடுத்தனர்.

அதோடு, பள்ளி கட்டிடம் மேற்கொண்டு எப்போது வேண்டுமானாலும் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகும் நிலையில் இருப்பதால் உடனடியாக இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று அந்தபகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர்.

இதுபற்றி அறிந்த அருண்மொழிதேவன் எம்.பி. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசி புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த பள்ளி கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. இப்பணிகள் அனைத்தும் முழுமையடைந்த பின்னர், புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அருண்மொழி தேவன் எம்.பி. தெரிவித்தார். இந்த கட்டிடம் கட்டும் வரையில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்தே பள்ளி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story