கோவை சிறைக்குள் கைதியை கொன்றவர் மீது கொலை வழக்குப்பதிவு நீதிபதி நேரில் சென்று காவலை நீட்டித்தார்


கோவை சிறைக்குள் கைதியை கொன்றவர் மீது கொலை வழக்குப்பதிவு நீதிபதி நேரில் சென்று காவலை நீட்டித்தார்
x
தினத்தந்தி 14 Jan 2019 4:30 AM IST (Updated: 14 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கோவை சிறையில் கைதியை கொன்றவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறைக்கு நீதிபதி நேரில் சென்று காவலை நீட்டித்தார்.

கோவை, 

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் அருகே உள்ள பிச்சம்பாளையம்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 10-ந்தேதி அதிகாலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் ராமசாமி இறந்தார். ராமசாமியின் உடல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவருடைய பின்னந்தலையில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து சிறையில் விசாரணை நடத்தியபோது, ராமசாமியுடன் ஒரே அறையில் தங்கி இருந்த சுரேஷ் (38) என்ற மற்றொரு கைதி ராமசாமியை அடித்தும், கல்லில் தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது. சுரேஷ், கடலூர் மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, மோசடி வழக்குகள் உள்ளன. கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சுரேஷ், அங்குள்ள சிறையிலும் ஒரு கைதியை தாக்கியதால் கடந்த 2017-ம் ஆண்டு கோவை சிறைக்கு மாற்றப்பட்டு இருந்தார்.ஆயுள்தண்டனை கைதி ராமசாமி, சிறையில் உள்ள தொழில்கூடத்தில் வேலை பார்த்து பணம் வைத்து இருந்தார். இந்த பணத்தில் இருந்து ரூ.900 சுரேசுக்கு ராமசாமி கடன் கொடுத்துள்ளார். கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததுடன், மேலும் பணம் கேட்டு சுரேஷ் தொந்தரவு செய்துள்ளார். இதனால் ராமசாமி வேறு அறைக்கு மாற விரும்பியுள்ளார். இதற்காக சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்து இருந்தார். வேறு அறைக்கு செல்லப்போவதாக ராமசாமி, சுரேசிடம் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ராமசாமியை அடித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனை அடைந்து வரும் சுரேஷ், ராமசாமியை கொன்றதை தொடர்ந்து அவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து நீதித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை 8-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் நேற்று காலை கோவை சிறைக்கு சென்று, கைதி சுரேசுக்கு கொலை வழக்கில் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.கொலை நடைபெற்ற அன்று சிறையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட சிறைக்காவலர்கள் 4 பேருக்கு விளக்கம் கேட்டு சிறை சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நோட்டீசு வழங்கி உள்ளார். விசாரணை முடிவில் 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும்சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story