கோவையில் ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை
கோவையில் தனியார் ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 26). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், வெறைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் அறை எடுத்து தங்கினார். ஆனால் நீண்டநேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள், அறையின் கதவை தட்டியும் திறக்க வில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாலமுருகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார்.இது குறித்த தகவலின் பேரில் வெறைட்டிஹால் ரோடு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். அவரை சோதனையிட்ட போது சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மானம்புசாவடியை சேர்ந்தவர் சரவணன் (35). இவரும் அதே ஓட்டலின் மற்றொரு கிளையில் டிரைவராக கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் அந்த ஓட்டலின் வாகன நிறுத்தும் இடத்தில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதை அறிந்த சாய்பாபாகாலனி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரிய வில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சரவணன் சாவில் மர்மம் இருப்பதாகவும், உரிய இழப்பீடு வழங்க கோரியும் உறவினர் கள் சரவணனின் உடலை வாங்க மறுத்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் மற்றும் போலீசார் சரவணனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. அதை ஏற்று சரவணனின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.
Related Tags :
Next Story