நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்
நேரடி கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து திருமருகலில் சாலையில் நெல் கொட்டி விவசாயிகள் மறியில் ஈடுபட்டனர்.
திருமருகல்,
திருமருகலில் தற்போது சம்பா அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து திருமருகல் கடைத்தெருவில் சாலையில் நெல்லை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நாகூர்–சன்னாநல்லூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.