நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள்–மொபட் மோதல்; 2 பேர் பலி


நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள்–மொபட் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2019 4:00 AM IST (Updated: 14 Jan 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

நத்தக்காடையூர் அருகே மோட்டார் சைக்கிள்–மொபட் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முத்தூர்,

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள ஊஞ்சமரம் மொட்டபுளியங்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கைத்தறி நெசவுத்தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி செல்லம்மாள் (58). இவர்களுடைய மகன்வழி பேத்தி அனுஷியா. இவரை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி பூச்சக்காட்டு வலசில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பேத்திக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்களை சுப்பிரமணியும், அவருடைய மனைவி செல்லம்மாளும் நேற்று காலையில் ஒரு மொபட்டில் கொண்டு சென்றனர். பின்னர் பொங்கல் சீர்வரிசையை கொடுத்து விட்டு மொபட்டில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சுப்பிரமணி ஓட்டினார். பின் இருக்கையில் செல்லம்மாள் அமர்ந்து இருந்தார். இவர்களுடைய மொபட் முத்தூர் அருகே பழையக்கோட்டை புதூர் பஸ் நிலையம் அருகே மயான வளைவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரங்கம் அகரெழுத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (33) என்பவர் வந்து கொண்டிருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மொபட்டில் சென்ற சுப்பிரமணி, செல்லம்மாள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற கிருஷ்ணகுமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பலியானார். உடனே அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகுமாரை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணகுமார் இறந்தார். செல்லம்மாளை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story