50 ஆண்டு கால அரியமங்கலம் உரகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு குப்பைகளை பிரித்து அகற்றும் பணி ரூ.49 கோடியில் தொடக்கம்
50 ஆண்டுகால அரியமங்கலம் உரகிடங்கு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது. குப்பைகளை பிரித்து அகற்றும்பணி ரூ.49 கோடியில் தொடங்கப்பட்டு உள்ளது.
திருச்சி,
திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சி உர கிடங்கு உள்ளது. 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த உர கிடங்கில் திருச்சி நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 50 ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் இது உரக்கிடங்கு போல் அல்லாமல் குப்பைகளால் உருவாக்கப்பட்ட பெரிய மலைத்தொடர் போல் காட்சி அளித்து வருகிறது. இந்த உர கிடங்கினால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த குப்பை கிடங்கில் திடீர் திடீர் என ஏற்பட்ட தீ விபத்துகளினால் புகை மூட்டம் உண்டாகி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதனால் இந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்பட பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து இந்த குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்றம் செய்யவேண்டும் என கோரி பல போராட்டங்கள் நடந்தன. அதன் பின்னர் உர கிடங்கில் குப்பைகளை சேகரித்து கொட்டுவது நிறுத்தப்பட்டது. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை தனியார் நிறுவனம் மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்தது.
சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.49 கோடியில் உர கிடங்கை முற்றிலுமாக அகற்றுவதற்கு டெண்டர் விடப்பட்டது. ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் ‘பயோ மைனிங்’ என்ற முறையில் நவீன எந்திரங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்கள், துணி வகைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தனியாகவும், மக்கும் குப்பைகளை தனியாகவும் பிரித்தெடுத்து 2 ஆண்டுகளில் குப்பைகளை முற்றிலுமாக அப்புறப்படுத்தும். இதன் மூலம் சுமார் 50 ஆண்டுகால குப்பை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். அதன் பின்னர் உர கிடங்கு இருந்த இடத்தில் பொழுது போக்கு பூங்கா, நூலகம், ஆரம்ப சுகாதார வளாகம் அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
உரகிடங்கு அகற்றும் பணிக்கு நேற்று பூமி பூஜை போடப்பட்டது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி பங்கேற்று தொடங்கி வைத்தனர். மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகர பொறியாளர் அமுதவள்ளி, நகரமைப்பு அதிகாரி சிவபாதம், உதவி ஆணையர் குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் குழுமாயி அம்மன் கோவில் பகுதியில் இருந்து செட்டிப்பாலம் (கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை) வரை 2½ கி.மீ. நீளத்துக்கு ஸ்மார்ட் நகரம் திட்டத்தின் கீழ் ரூ.17 கோடியே 56 லட்சத்தில் வாய்க்காலை சீரமைத்து 3 இடங்களில் நவீன பூங்காக்கள் அமைப்பது, அதன் கரைகளை பலப்படுத்தி படித்துறைகளை மேம்படுத்துவது, திறந்தவெளி அரங்கு,கண்காணிப்பு கேமரா, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதி, சுற்றுசுவர், நடைபயிற்சி தளம் அமைக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தி மின்விளக்கு அமைக்கும் திட்டத்தையும் அமைச்சர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.