மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்க நடவடிக்கை அமைச்சர் பாஸ்கரன் தகவல்
மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையில் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி தலைவர் சதீஸ்பாபு தலைமையில் நடைபெற்றது. பகீரத நாச்சியப்பன் வரவேற்று பேசினார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர நாற்காலி, வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:– காலச் சூழலில் நீங்கள் எந்த நிலையிலும் உயரலாம். யாருக்கும் எதுவும் நிரந்தரம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்றமும், இறக்கமும் உண்டு. நமக்கு நல்ல பழக்கவழக்கம், தன்னம்பிக்கை, நாணயம், நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயரலாம். மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.
நமது மாவட்டத்தில் உள்ள வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் விண்ணப்பித்தால் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஏற்கனவே மனையிடம் இருந்தால் அவர்களுக்கு வீடு கட்ட அரசு உதவி செய்யும். மாற்றுதிறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. இந்த அரசு தொடர்ந்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் சரவணகுமார், பேராசிரியர் ஆனந்தசெல்வம், டாக்டர் தீபக், மாற்றம் மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் பிரபாகரன், பொருளாளர் லட்சுமணன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிகுமார், மோகன், பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.