ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் விவசாயிகள் பீதி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைத்தோட்டத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் விவசாயிகள் பீதியடைந்து உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கு அருகே உள்ள வேலங்குளம் கண்மாய், ஓடைக்குளம் கண்மாய் மற்றும் பெரியகுளம் கண்மாயின் கால்வாய் பகுதிக்கு தெற்கே உள்ள பகுதி வரை சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இனாம்கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது தோட்டத்தில் நின்ற சிறுத்தையை கண்டதும் பயந்து வீட்டிற்கு வந்து விட்டார். இந்த தகவலை அறிந்த கிராமத்தினர் வாழைத்தோப்பில் சென்று பார்த்த போது வரப்பை ஒட்டிய பகுதியில் சிறுத்தையின் கால்தடம் இருந்தது தெரியவந்தது.
வேலங்குளம் கண்மாய் மற்றும் ஓடைக்குளம் கண்மாய் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அடர்வனமாக இருப்பதால் வனவிலங்குகள் இப்பகுதியில் தங்க ஏதுவாக இருக்கிறது. இதனால் எந்த நேரத்தில் சிறுத்தை வருமோ என விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள வயல்களுக்கு வரவே விவசாயிகள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் உலாவரும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விடவும், கண்மாய்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.