முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார் பெங்களூருவில் நாளை திருவள்ளுவர் தினவிழா ‘பாகுபாடுகளை மறந்து தமிழர் என்ற உணர்வுடன் ஒன்று திரள்வோம்’ - எஸ்.எஸ்.பிரகாசம் அழைப்பு


முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்கிறார் பெங்களூருவில் நாளை திருவள்ளுவர் தினவிழா ‘பாகுபாடுகளை மறந்து தமிழர் என்ற உணர்வுடன் ஒன்று திரள்வோம்’ - எஸ்.எஸ்.பிரகாசம் அழைப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:59 PM GMT (Updated: 13 Jan 2019 10:59 PM GMT)

பெங்களூருவில் நாளை(செவ்வாய்க்கிழமை) திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட உள்ளது. முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொள்ளும் இந்த விழாவில் ‘சாதி, மதம், கட்சி பாகுபாடுகளை மறந்து தமிழர் என்ற உணர்வுடன் ஒன்று திரள்வோம்’ என்று எஸ்.எஸ்.பிரகாசம் அழைப்பு விடுத்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் ஆண்டுதோறும் கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் ஏற்பாட்டில் திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நாளை(செவ்வாய்க் கிழமை) திருவள்ளுவர் தினவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழா தொடர்பாக அல்சூர் ஏரிக்கரையில் உள்ள பெங்களூரு தமிழ் சங்கத்தில் வைத்து எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விழா நடத்துவது குறித்து கருத்து கேட்கப்பட்டு விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர், எஸ்.எஸ்.பிரகாசம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

வருகிற 15-ந் தேதி(நாளை) அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து ‘திருவள்ளுவர் தினவிழா’ விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பெங்களூரு தமிழ் சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமையில் இந்த விழா நடைபெறும்.

விழாவில் காலை 10 மணிக்கு கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, கர்நாடக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மேயர் கங்காம்பிகே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மந்திரிகளான கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ணபைரேகவுடா உள்பட எம்.பி.க்கள், எம்எல்.ஏ.க்கள், கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ரவிசங்கர் குருஜி, கவுன்சிலர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக் கிறார்கள்.

அல்சூர் ஏரிக்கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவியதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு உண்டு. இதனால் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினவிழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

சாதி, மதம், கட்சி பாகுபாடு இன்றி தமிழர்கள் என்ற உணர்வுடன் பெங்களூரு வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டு அய்யன் திருவள்ளுவருக்கு மரியாதை செய்ய வேண்டும். பெங்களூரு தவிர, சிவமொக்கா, மைசூரு, சிக்கமகளூரு உள்பட வெளிமாவட்டங்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இந்த விழாவின் மூலமாக தமிழர்களின் ஒற்றுமையை அனைவருக்கும் காட்டுவோம்.

இந்த விழாவின்போது பெங்களூருவில் வசித்து கொண்டு சமூக நல சேவையாற்றி வருபவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்படுகிறது. முன்வரும் நாட்களிலும் தொடர்ந்து திருவள்ளுவர் தினவிழா கொண்டாடும் வகையில் தனிக்கமிட்டி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. விழாவையொட்டி, காலை 8 மணிக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெறும். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் செயலாளர் எம்.சி.குமார், பாரதி நகர் பிளாக் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், பெங்களூரு தமிழ் சங்கத்தின் துணை செயலாளர் அமுதபாண்டியன், பெங்களூரு தமிழ் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story