அதிருப்தியில் இருக்கும் 3 பேர் மும்பையில் உள்ளனர் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


அதிருப்தியில் இருக்கும் 3 பேர் மும்பையில் உள்ளனர் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 13 Jan 2019 11:25 PM GMT (Updated: 13 Jan 2019 11:25 PM GMT)

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும், தற்போது அதிருப்தியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜனதா செய்யும் தந்திரங்கள் எனக்கு பற்றி நன்கு தெரியும். எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன். கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று தற்போது சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? பா.ஜனதாவை சேர்ந்தவர்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story