நல்லம்பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் 1,336 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


நல்லம்பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் 1,336 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 6:13 PM GMT)

நல்லம்பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் 1,336 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்தில் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு உதவி கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் தலைவர் கே.வி.ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூகநல அலுவலர் நாகலட்சுமி வரவேற்று பேசினார்.

இந்த விழாக்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 4 இடங்களிலும் மொத்தம் 1,336 பெண்களுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார். நல்லம்பள்ளியில் 325 பெண்களுக்கும், பென்னாகரத்தில் 421 பெண்களுக்கும், பாலக்கோட்டில் 309 பெண்களுக்கும், காரிமங்கலத்தில் 281 பெண்களுக்கும் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 95 லட்சம் ஆகும்.

இந்த விழாக்களில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 53 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர். இதில் 6 லட்சம் பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 4 லட்சத்து 53 ஆயிரம் பயனாளிகள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்தவர்கள். தமிழகம் முழுவதும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் ஆகியவற்றில் 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து உள்ளன என்று கூறினார்.

இந்த விழாக்களில் கூட்டுறவு சங்க தலைவர்கள் சிவப் பிரகாசம், வீரமணி, கோபால், குமார், செல்வராஜ், ஜோதி பழனிசாமி, சங்கர், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சுப்பிரமணியன், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story