ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Jan 2019 4:15 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தை உணராமல் வனவிலங்குகளுடன் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.

கூடலூர்,

கூடலூரில் இருந்து மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டு யானை, புலி, கரடி, மான், காட்டெருமை, சிறுத்தை புலி, செந்நாய் என வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர். அவர்களை வனத்துறையினர் தங்களது வாகனங்களில் வனத்துக்குள் அழைத்து சென்று வனவிலங்குகளை காண ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதேபோல் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் முதுமலை வழியாக ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் வந்து நிற்கும் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்வது வாடிக்கையான வி‌ஷயமாக உள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை மட்டும் கண்டு செல்லும் நிலை மட்டுமே இருந்தது.

ஆனால் தற்போது அனைவரது கைகளிலும் இருக்கும் வகையில் செல்போன்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் வனவிலங்குகளை காணும் ஆவலில் தங்களது கையில் உள்ள செல்போன்களால் செல்பி எடுக்கும் செயல்கள் தொடர் கதையாகி வருகிறது. காட்டுயானைகள், காட்டெருமைகள் மனிதர்களை தாக்கும் தன்மை உடையவை. இதை அறியாத சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுடன் செல்பி எடுக்கும் பழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய ரோந்து பணி மேற்கொண்டு வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story