காரமடையில் மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை சேவை சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காரமடையில் மேம்பாலம் கட்டியும் பயனில்லாததால், பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதை தொடர்ந்து சேவை சாலை அமைத்து வாகன நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காரமடை,
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் காரமடை வழியாக செல்கின்றன. ஒரு நாளைக்கு இந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் காரமடை ரெயில்வே மேம்பால பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் தினமும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க காரமடையில் கடந்த 2015–ம் ஆண்டு ரூ.34 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது.
அந்த சமயத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு கண்ணார்பாளையம் வழியாக வாகனங்கள் சென்று வந்தன. இது மிகவும் குறுகியதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் 100–க்கும் மேற்பட்ட விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 20–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பை விட, மிகவும் தாமதமாக மேம்பால பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால் முந்தைய திட்டப்படி பாலத்தின் இருபுறமும் சேவை சாலை (சர்வீஸ் ரோடு) கழிவுநீர் கால்வாய், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இதனால் பாலம் திறக்கப்பட்டும் பழையபடியே வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மீண்டும் அவதிபட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மேம்பாலம் அகலமாகவும், காரமடை நகரின் நுழைவுவாயில் பகுதி மிகவும் குறுகியதாகவும் இருப்பதாகும்.
மேம்பாலமும் சாலையும் சந்திக்கும் இடத்தில் பேருந்து நிலையம், ரெயில் நிலையம், அரங்கநாதர் கோவில், சந்தை கடைகள், கோவை–மேட்டுப்பாளையம் ரோடு என 5 இடங்களுக்கு செல்லும் சாலைகள் ஒன்றாக இணைவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பாலத்தின் இருபுறமும் உள்ள கடைகள், வங்கிகளுக்கு வருபவர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்துவதால் வாகன நெருக்கடி அதிகரிக்கிறது. இதனால் கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இதற்கு எப்போது நிரந்தர தீர்வு காணப்படும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காரமடை மேம்பால பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் மேம்பாலத்தின் இருபுறமும் 5½ மீட்டர் அகலத்தில் சேவை சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க 1½ மீட்டர் அகலம் என மொத்தம் 7 மீட்டர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நில உரிமையாளர்கள் இடம் கொடுக்க மறுத்து விட்டனர்.
எனவே தற்போது திட்டத்தில் மாறுதல் செய்யப்பட்டு மேம்பாலத்தின் இருபுறமும் 3¾ மீட்டர் அகலத்தில் சேவை சாலையும், 1 மீட்டர் அகலத்தில் கழிவுநீர் கால்வாயும் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருவாய் துறையினர் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணப்பட்டுவாடா செய்து நிலத்தை ஆர்ஜிதப்படுத்தி நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்த பின்னர் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, 45 நாட்களில் முடிக்கப்படும் என்றனர்.
இது குறித்து வருவாய் துறையினர் கூறுகையில், மேம்பாலத்தின் இருபுறமும் சேவை சாலை (சர்வீஸ் ரோடு), கழிவுநீர் கால்வாய் அமைக்க நில உரிமையாளர்கள் 68 பேரிடம், 99 சென்ட் இடம் ஆர்ஜிதம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை, நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான ஆவணம், வரைபடங்கள் உள்ளிட்டவற்றை சமர்பிக்கவில்லை.
ஆவணங்களை வழங்கிய 10 பேருக்கு பணம் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பணப்பட்டுவாடா செய்யப்படும் என்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மேம்பால கட்டுமான பணி ஆரம்பிக்கும் முன்பே தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்திருந்தால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தவிர்த்து இருக்கலாம். மேலும் ஐந்துமுக்கு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இதை தொடர்ந்து ஐந்து முக்கு பகுதியில் பெரிய ரவுண்டானா அமைத்து மேம்பாலத்தின் இருபுறமும் சேவை சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளை உடனடியாக முடித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அடுத்த மாதம் காரமடையில் தேர் திருவிழா நடைபெற உள்ளதால், அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.