நடுவழியில் நின்றுவிடுவதால் அவதி: வால்பாறைக்கு புதிய அரசு பஸ்கள் கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு


நடுவழியில் நின்றுவிடுவதால் அவதி: வால்பாறைக்கு புதிய அரசு பஸ்கள் கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:15 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்கும், அரசு பஸ்களால் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆகவே புதிய அரசு பஸ்கள் கிடைக்குமா? என்கிற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

வால்பாறை,

அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு 555 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வால்பாறை பகுதியில் இயக்கப்படும் பழுதடைந்த பஸ்களுக்கு பதிலாக மாற்று பஸ்கள் கிடைக்குமா? என்கிற எதிர்ப்பார்ப்பில் வால்பாறை பகுதி பயணிகள் உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:– வால்பாறையை பொறுத்தவரை அரசு, பஸ்களின் உள்ளேயும் வெளியேயும் உடைந்து சேதமடைந்த நிலையில்தான், இயக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் பஸ்களின் உள்ளே நனைந்து கொண்டுதான் பயணம் செய்யவேண்டியுள்ளது. பெரும்பாலான பஸ்களின் கூரைகளும் பழுதடைந்து விட்டன. கோவை, நீலகிரி பகுதிகளில் ஓடி பழதடைந்த பஸ்கள் தான் சரி செய்யப்பட்டு வால்பாறை பகுதியில் இயக்கப்படுவதற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனால் அடிக்கடி அரசு பஸ்கள் பழுதடைந்து சாலைகளில் ஆங்காங்கே நின்று விடுகின்றன. சமீபத்தில் வால்பாறை காந்திசிலை பஸ்நிறுத்தம் பகுதியில் பழுதடைந்த அரசு பஸ்சை பயணிகளும் பஸ் பணியாளர்களும் தள்ளிச்செல்லும் நிலை ஏற்பட்டது. இது தவிர எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் அடிக்கடி நடுவழியில் பயணிகள் காத்திருந்து அவதிப்பட வேண்டியுள்ளது. எந்த பஸ்களிலும் மாற்று டயர்கள் கிடையாது. மாற்றுடயர்கள் இருந்தாலும் அவைகளை மாற்றுவதற்கான உபகரணங்கள் இருப்பதில்லை. ஆங்காங்கே பஸ்கள் பழுதடைந்து நின்று விடுவதால் அடிக்கடி அரசு பஸ்கள் தள்ளிச்செல்ல வேண்டிய நிலையிலேயே உள்ளது. இவ்வாறு வால்பாறை அரசு போக்குவரத்துகழக பஸ்களால் வால்பாறை பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த முறை அரசு சார்பில் புதிய அரசுபஸ்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்ட போதே புதிய அரசு பஸ்கள் வால்பாறைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய அரசுகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 7–ந் தேதியும் அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை வழங்கப்பட்ட பஸ்களிலாவது வால்பாறைக்கு ஒருசில பஸ்களாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளோம். இதற்காக வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ, முயற்சி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story