கூலி உயர்வு வழங்காததை கண்டித்து பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு


கூலி உயர்வு வழங்காததை கண்டித்து பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:45 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வு வழங்காததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரிக்க விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் 1,000–க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இதுதவிர 20–க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள் இருக்கின்றன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவற்றில் காட்டன் ரக சேலைகள், வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படும். கடந்த முறை வழங்கப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி ஜனவரி 1–ந்தேதி முதல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விசைத்தறி உரிமையாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிலாளர்கள் கொண்ட குழு மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 19 சதவீத கூலி உயர்வு வழங்க விசைத்தறி உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நெசவு செய்யப்படும் சேலைகளுக்கு மட்டும் 19 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என்றும், வேட்டிகளுக்கு 19 சதவீத கூலி உயர்வு வழங்க முடியாது என உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காததை கண்டித்து சக்கம்பட்டி விசைத்தறி தொழிலாளர்கள் பொங்கல் தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கருப்பு தினமாக கொண்டாட போவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சக்கம்பட்டி முழுவதும் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.


Next Story