முன்விரோதத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆத்திரம்: அண்ணன் –தம்பி மீது திராவகம் வீச்சு


முன்விரோதத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆத்திரம்: அண்ணன் –தம்பி மீது திராவகம் வீச்சு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:45 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் முன்பு விளையாடியதால் ஆத்திரம் அடைந்து, அண்ணன்–தம்பி மீது திராவகம் வீசியதாக கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

பழனி,

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி 5–வது வார்டை சேர்ந்தவர் முருகானந்தம். விவசாயி. அவருடைய மனைவி இலக்கியா. இந்த தம்பதிக்கு குமரன் (வயது 11), சரவணன் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர். முருகானந்தத்தின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பரந்தாமன்.

இவர், ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் பரந்தாமன் வீட்டின் முன்பு குமரன், சரவணன் ஆகியோர் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தனர்.

தனது வீட்டின் முன்பு சிறுவர்கள் விளையாடுவதற்கு பரந்தாமன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இங்கு விளையாடக்கூடாது என்று சிறுவர்களிடம் கூறினார். இருப்பினும் சிறுவர்கள் அங்கு விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரந்தாமன், சிறுவர்கள் மீது திராவகத்தை வீசியதாக கூறப்படுகிறது.

இதில், சிறுவர்களின் உடல் வெந்து அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் பரந்தாமன் மீது முருகானந்தம் புகார் அளித்தார்.

அந்த புகாரில், முன்விரோதத்தில் தனது மகன்கள் மீது பரந்தாமன் திராவகம் வீசியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story