செய்யூர் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் விபரீதம்


செய்யூர் அருகே 2 குழந்தைகளை கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:30 PM GMT (Updated: 14 Jan 2019 6:57 PM GMT)

கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் விரக்தி அடைந்த இளம்பெண், தனது 2 குழந்தைகளையும் கொன்று, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த பனையூர் பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் மொய்தீன். கார் டிரைவர். இவருடைய மனைவி நஸ்ரின் (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. சபீர்(3) என்ற மகனும், 1½ வயதில் நசிகா என்ற மகளும் இருந்தனர்.

மொய்தீனுடன் அவருடைய தங்கை மதினா(24)வும் வசித்து வருகிறார். இவர், சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்று தெரிகிறது. அடிக்கடி இவர் நஸ்ரின் மற்றும் அவரது குழந்தைகளை திட்டி வந்தார்.

இதனால் நஸ்ரின், தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்லலாம் என வற்புறுத்தி வந்தார். ஆனால் அதற்கு மொய்தீன் மறுத்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று மதியம் மொய்தீன் வெளியே சென்று விட்டார். குழந்தைகள் இருவரும் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தனர். நஸ்ரின், தனது குழந்தைகளை சாப்பிட வரும்படி வீட்டுக்குள் அழைத்துச்சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது குழந்தைகள் இருவர் மீதும் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் குழந்தைகள் இருவரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பின்னர் நஸ்ரினும் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நஸ்ரினை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நஸ்ரினும் உயிரிழந்தார்.

இதுபற்றி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி உத்தரவின்பேரில் செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நஸ்ரீனுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி மதுராந்தகம் ஆர்.டி.ஓ. விசாரித்து வருகிறார்.

Next Story