காரியாபட்டி அருகே தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் மறியல்


காரியாபட்டி அருகே தரமான சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:45 PM GMT (Updated: 14 Jan 2019 6:59 PM GMT)

காரியாபட்டி அருகே தரமாக சாலையை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே எஸ்.கடமங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலை பாரத பிரதமர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்தச் சாலை மோசமாக இருந்ததால் தற்போது ரூ.11.58 லட்சம் மதிப்பீட்டில் அதே பாரத பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சீரமைக்க டெண்டர் விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து எஸ்.கடமங்குளம் சாலையின் இருபுறங்களிலும் இருந்து மண்ணை எடுத்து சாலையில் நிரப்பி ஏற்கனேவ இருந்த தார்ச்சாலையில் மீண்டும் அதன் மேல் சாலையை போடும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து எஸ்.கடமங்குளம் பொதுமக்கள் ஏற்கனவே போடப்பட்ட சாலையை பெயர்த்து எடுத்து விட்டு புதிதாக தார்ச்சாலை போட்டால்தான் தரமாக இருக்கும் என்று சாலைப்பணியில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் சாலையை தரமாக அமைக்க வலியுறுத்தி திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காரியாபட்டி யூனியன் பொறியாளர் காஞ்சனாதேவி பொதுமக்களிடம் மதிப்பீட்டின்படிதான் சாலை அமைக்கப்படுகிறது என்றனர். அதற்கு பொதுமக்கள் மதிப்பீட்டு நகலை எங்களிடம் காண்பியுங்கள் என்று கூறினர். இதைத் தொடர்ந்து மதிப்பீட்டின் நகலை பொதுமக்களிடம் கொடுத்தனர்.

அதற்கு பொதுமக்கள் சாலை ததிப்பீட்டில் உள்ள தொகை அனைத்தும் அடித்து திருத்தப்பட்டு உள்ளது. எனவே நாங்கள் இதனை நம்ப மாட்டோம் என்று மறியலை கைவிட மறுத்தனர். இதனைத் தொடர்ந்து யூனியன் பொறியாளர் காஞ்சனாதேவி ஒப்பந்ததாரரிடம் பணியை நிறுத்தி வைக்குமாறு கூறினார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story