திருச்சி மத்திய மண்டலத்தில் முதன்முறையாக தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் டோக்கன்முறை அறிமுகம்


திருச்சி மத்திய மண்டலத்தில் முதன்முறையாக தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் டோக்கன்முறை அறிமுகம்
x
தினத்தந்தி 15 Jan 2019 4:00 AM IST (Updated: 15 Jan 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

வங்கிகளில் செயல்பட்டுவருவதை போல தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இனி வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

இந்தியாவில் வங்கிகளுக்கு அடுத்தபடியாக தபால்துறையிலும் வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதனால் நீண்ட வரிசையில் நின்று வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும், செலுத்துவதற்கும் காத்து கிடக்கின்றனர்.

இதையடுத்து வங்கிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கு ஒரு சிறிய பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தினால் அதில் ஒரு டோக்கன் வரும். அந்த வரிசை எண் அங்குள்ள திரைப்பலகையில் அறிவிப்பு வரும் போது உடனே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் எந்த கவுண்டர் என்று அறிவிக்கப்பட்டதோ? அங்கு சென்று பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ செய்யலாம்.

அதுவரை வாடிக்கையாளர்கள் அங்கு போடப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்திருக்கலாம். வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. இது போன்ற வசதி தஞ்சையில் உள்ள ஒரு சில வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் பல வங்கிகளில் இந்த டோக்கன்முறை அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் தஞ்சையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் டோக்கன்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தபால் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கருவியில் தொடுதிரை வசதி மூலம் வாடிக்கையாளர்கள் டோக்கன் எடுத்துக்கொள்ளலாம். தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் 7 கவுண்டர்கள் உள்ளன.

இதில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவது, எடுப்பது, சிறுசேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்தவது, மின்கட்டணம் செலுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு வந்தனர். இது தவிர பதிவு தபால்களையும் அனுப்பி வந்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். மேலும் வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று இந்த சேவைகளை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் முதன்முறையாக தஞ்சையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் மட்டும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தபால் நிலையத்திற்குள் நுழையும் இடத்தின் அருகே இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்கள் டோக்கன் எடுத்துக்கொண்டு இருக்கைகளில் சென்று அமர்ந்து கொள்ளலாம். அந்த டோக்கன் எண் அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட கவுண்டர் நம்பரை தெரிவிக்கும் போது அங்கு சென்று பணத்தை எடுக்கவும், செலுத்தவும் முடியும்.

இது குறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வங்கி சேவைகளுக்கு நிகராக தபால்துறையிலும் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தபால் துறையில் வங்கி சேவைகள் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து பல்வேறு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 1–ந்தேதியில் இருந்து இணைய வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தஞ்சை கோட்டத்தில் உள்ள 43 தபால் நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது திருச்சி மத்திய மண்டலத்தில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் தான் இந்த டோக்கன் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் தபால்தலைகள், அஞ்சல் அட்டைகள் வாங்குவது தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் இந்த டோக்கன்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி வாடிக்கையாளர்கள் கால் கடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. டோக்கன் எடுத்துக்கொண்டு அவர்கள் உட்கார்ந்து கொள்ளலாம். இதற்காக இருக்கை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் மட்டும் பணம், எடுப்பது, செலுத்துவது, என தினமும் 300–க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்’’என்றார்.


Next Story