டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக ரூ.2.17 கோடி மோசடி செய்த தூர்தர்ஷன் ஊழியர் கைது


டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக ரூ.2.17 கோடி மோசடி செய்த தூர்தர்ஷன் ஊழியர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2019 3:20 AM IST (Updated: 15 Jan 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. தொடர்களில் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக கூறி, ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த தூர்தர்ஷன் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை ஓஷிவாராவை சேர்ந்தவர் முகபத் ஆலம். வைர வியாபாரி. இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த தூர்தர்ஷன் நிறுவன ஊழியரான சிண்டு பிகானி(வயது42) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தனக்கு டி.வி. தொடர் நாடகங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும், அதற்கான வாய்ப்பு பெற்று தரும்படியும் முகபத் ஆலம் கூறினார்.

இதற்கு சிண்டு பிகானி வாய்ப்பு பெற்று தருவதாக உறுதி அளித்தார். மேலும் சிண்டு பிகானியின் மனைவி மீனா, அவர்களது நண்பர் தர்மேந்திரா என்பவரும் நடிக்க வாய்ப்பு பெற்று தருவதாக அவரிடம் உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவரிடம் இருந்து 3 பேரும் ரூ.2 கோடியே 17 லட்சத்தை காசோலையாக பெற்றுக்கொண்டனர்.

இதன்பின்னர் அவருக்கு நடிக்க வாய்ப்பு பெற்று தராமல் சிண்டு பிகானி காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த முகபத் ஆலம் நடத்திய விசாரணையில், சிண்டு பிகானி உள்பட அவரது மனைவி மீனா, நண்பர் தர்மேந்திரா ஆகியோர் சேர்ந்து தன்னை ஏமாற்றி வருவதை உணர்ந்தார். இது தொடர்பாக அவர் ஓஷிவாரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த சிண்டு பிகானியை டெல்லியில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை மும்பை அழைத்து வந்து பாந்திரா மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த மோசடியில் தொடர்புடைய சிண்டு பிகானியின் மனைவி மீனா, கூட்டாளி தர்மேந்திரா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story