ஓடும் ரெயிலில் பயணிகள் ஏறுவதை தடுக்க எச்சரிக்கை விளக்கு : மும்பையில் சோதனை முயற்சி
ஓடும் ரெயிலில் பயணிகள் ஏறுவதை தடுக்க மின்சார ரெயில் பெட்டிகளில் எச்சரிக்கை விளக்கு பொருத்த மத்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் ஒரு மின்சார ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இந்த விளக்கு சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டு உள்ளது.
மும்பையில் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரெயில்களில் காலை, மாலை நேரங்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. அலுவலகத்துக்கு செல்லவேண்டும், வீடு திரும்பவேண்டும் என்ற அவசரத்தில் பெரும்பாலான பயணிகள் ஆபத்தை உணராமல் ஓடும் ரெயிலில் ஏறுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றனர்.
இதில், பிளாட்பார இடைவெளியில் தண்டவாளத்தில் தவறி விழுந்து பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க மத்திய ரெயில்வே மின்சார ரெயில் பெட்டிகளின் வாசற்படிகளின் மேல், ரெயில் புறப்பட்டு விட்டதை பயணிகளுக்கு உணர்த்தும் வகையில் ஊதா நிறத்தில் எரியும் எச்சரிக்கை விளக்கை பொருத்த திட்டமிட்டு உள்ளது.
சோதனை முயற்சியாக ஒரு மின்சார ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் இந்த விளக்கு பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் பிளாட்பாரத்தில் நின்றுவிட்டு கிளம்பியதும், இனி ஏறக்கூடாது என பயணிகளை எச்சரிக்கும் வகையில் இந்த விளக்கு எரியும். இதன் மூலம் பயணிகள் ஓடும் ரெயிலில் ஏறும்போது தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் குறையும் என மத்திய ரெயில்வே அதிகாரிகள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக பயணிகளின் கருத்துகளை கேட்ட பின்னர் அனைத்து ரெயில்களிலும் இந்த விளக்குகளை பொருத்த வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய ரெயில்வே தலைமை செய்தி தொடர்பு அதிகாரி சுனில் உடாசி கூறினார்.
இதுபற்றி பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘மும்பையை பொறுத்தவரை கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் மின்சார ரெயிலில் ஏறுவதே பெரும்பாடாக இருக்கிறது.
எனவே பயணிகள் அவசரத்தில் தான் ஏறுவார்கள். அந்த நேரத்தில் நாங்கள் பிளாட்பார இடைவெளியை கவனிப்போமா? அல்லது ரெயில் பெட்டிக்கு மேல் இருக்கும் எச்சரிக்கை விளக்கை பார்ப்போமா?.
இந்த திட்டத்தால் பயணிகளுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இதுபோன்ற திட்டங்களுக்கு பணத்தை விரயம் செய்வதற்கு பதிலாக ரெயில் சேவைகளை மேம்படுத்துவதற்கு செலவிட வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story