மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு தடை : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மும்பை அரபிக்கடலில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.
மும்பை,
மராட்டிய பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவ முடிவு செய்தது.
இதன்படி 212 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய சிலையுடன் பிரமாண்ட நினைவு சின்னம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மும்பை கவர்னர் மாளிகையில் இருந்து 1½ கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் பீடம் அமைக்கப்பட்டு அதன் மீது குதிரையில் அமர்ந்தவாறு சத்ரபதி சிவாஜி கம்பீரமாக செல்வதை போல் சிலை நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். சிலை அமைக்கும் பணியை செய்வதற்கு ‘எல் அண்டு டி’ நிறுவனம் நியமிக்கப்பட்டது.
மேலும் சத்ரபதி சிவாஜி சிலை அமைப்பதற்கான பணி ஆணையும் வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும் இந்த திட்டத்துக்கு பூமி பூஜை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் திட்டத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் உரிய சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் அரபிக்கடலில் மராட்டிய அரசு, இந்த சிலையை அமைக்க உள்ளதாக கூறி, சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிடவேண்டும் என பாதுகாப்பு திட்ட அறக்கட்டளை என்ற அமைப்பு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையின் போது சத்ரபதி சிவாஜி சின்னம் அமைக்கும் திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து அந்த அறக்கட்டளை சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.காவுல் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர்.
மேலும் அரபிக்கடலில் இந்த திட்டத்தின் கீழ் எந்த பணிகளையும் மாநில அரசு செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story