பெங்களூருவுக்கு வர கட்சி மேலிடம் திடீர் தடை : பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானா, டெல்லியில் முகாம்
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவுக்கு வருவதற்கு கட்சி மேலிடம் திடீர் தடை விதித்திருப்பதால், அவர்கள் அனைவரும் அரியானா, டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இன்றும், நாளையும் அவர்கள் அங்கேயே தங்கியிருக்க உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பா.ஜனதா ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் இன்னும் சில நாட்களில் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சங்கராந்தி (பொங்கல்) பண்டிக்கைக்கு பின்பு கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று பா.ஜனதா தலைவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
இதற்கிடையில், டெல்லியில் நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள எடியூரப்பா, பிற தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் சென்றிருந்தனர். ஆனால் கவுன்சில் கூட்டம் முடிந்த பின்பும் அந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்திற்கு திரும்பவில்லை. டெல்லியில் முகாமிட்டுள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதாவின் தேசிய தலைவர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும், அதனால் அவர்கள் டெல்லியில் தங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் கர்நாடக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தவில்லை. மாநில தலைவர் எடியூரப்பா மட்டுமே ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், நேற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் நேற்றும் அவர் கர்நாடக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்திக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்்களை இழுக்க நினைக்கும் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க குமாரசாமி நினைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை எடியூரப்பா கூறினார். அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேருடன் ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனால் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முன்பாக தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்திற்கு திரும்புவதற்கு எடியூரப்பா அதிரடி தடை விதித்துள்ளார். பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்திற்கு திரும்ப எடியூரப்பா தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, டெல்லியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜனதா ஆளும் மாநிலமான அரியானாவில் உள்ள ரெசார்ட் ஓட்டலில் நேற்று மாலையில் அழைத்து செல்லப்பட்டார்கள்.
கட்சி தாவ வாய்ப்பில்லை என்பவர்கள் மட்டும் டெல்லியில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் அரியானாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 100 பேர் முகாமிட்டுள்ளனர். 4 பேர் மட்டும் அங்கு இல்லை. அவர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வர முடியாத காரணம் குறித்து எடியூரப்பாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். டெல்லி, அரியானாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) தங்கி இருக்க உள்ளனர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகத்தில் எதிர்க்கட்சியாகவே இருக்க பா.ஜனதா விரும்புகிறது - எடியூரப்பா சொல்கிறார்
டெல்லியில் நேற்று மாலை எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நாங்கள் இழுக்க முயற்சி செய்யவில்ைல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எங்களுடன் தொடர்பில் இல்லை. ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை குமாரசாமி மற்றும் ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் இழுக்க முயற்சி செய்கிறார்கள். அதனால் எங்களது எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 2 நாட்கள் டெல்லி மற்றும் அரியானாவிலேயே இருப்பார்கள். யாரும் பெங்களூருவுக்கு செல்ல மாட்டார்கள்.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு இல்லை. அதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புகின்றனர். சிறந்த எதிர்க்கட்சியாக இருக்கவே பா.ஜனதா விரும்புகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story